

புதுக்கோட்டை:
தமிழகத்தில் இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தலை விட இந்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் சற்று வித்தியாசம் தான். கொரோனா நோய் பரவலுக்கு மத்தியில் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து இந்த தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களின் உடல் வெப்ப நிலையை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை மேற்கொண்டும், கைகளை கழுவ கிருமி நாசினி மற்றும் கையுறைகள் வழங்கியும், முக கவசம் கொடுத்தும் அனுமதிக்க உள்ளது.
கொரோனா தொற்று பாதித்தவர்களும் மற்றும் தொற்று பாதிப்பு இருக்குமோ? என்ற சந்தேக நபர்களுக்கும் பாதுகாப்பு கவச உடைகள் கொடுத்து அணிந்து வாக்களிப்பதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பாதுகாப்பு கவச உடைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல வாக்குச்சாவடிகளில் பணியாற்றுபவர்களுக்கு கையுறைகள், முகம் முழுவதும் மறைக்க கூடிய கவச உபகரணம், முககவசம், கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது.
மேலும், வாக்குச்சாவடிகளுக்கு வருபவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு, மயக்கம் ஏற்பட்டால் அவர்களுக்கு சக்தியை அதிகரிக்க கூடிய எனர்ஜி பானம் வழங்குவதற்கான பொடியும் தயாராக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 11 வகையான பொருட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு அனுப்ப தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளுக்கான கொரோனா தடுப்பு உபகரணங்கள் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் மொத்தமாக வந்திறங்கின. இவை அந்தந்த தொகுதி வாரியாக பிரித்து வைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமாமகேஸ்வரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் மொத்தம் 1,902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 9,128 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்.
தேர்தல் ஆணைய அறிவுரைப்படி கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளின்படி நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான கைகழுவும் திரவம், தெர்மல் ஸ்கேனர், பாலித்தீன் கையுறைகள், துணி முககவசம், தன் பாதுகாப்பு உபகரணப் பெட்டி, உயிர்கழிவு சேகரிப்பு டிரம் உள்ளிட்ட 11 வகையான தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.
வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் நாளுக்கு முதல் நாள், தேர்தல் நாளில் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மற்றும் தேர்தல் பணி நிறைவடைந்த பின்னர் முழுமையாக தொற்று நீக்கம் செய்யும் பணியினை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்து, கைகழுவும் திரவம் மற்றும் பாலித்தீன் கையுறை வழங்க ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 2 தன்னார்வலர்கள் வீதம் மொத்தம் 3,804 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குசாவடிகளிலிருந்து சேகரிக்கப்படும் பயன்படுத்திய முக கவசம், கையுறைகள் போன்ற உயிர்கழிவுகள் முறையாக பேக்கிங் செய்து உயிர் மருத்துவ கழிவு சேகரிப்பு மையங்களில் உள்ளாட்சி அமைப்பினரால் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, சுகாதார துணை இயக்குனர் கலைவாணி, நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர். ஒவ்வொரு தொகுதிக்கும் இந்த உபகரணங்கள் அனைத்தும் அனுப்பும் பணி நேற்று முதல் தொடங்கியது.