

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 711 எக்டேர் சம்பா, 38 ஆயிரத்து 765 எக்டேர் தாளடி என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 476 எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. புரெவி, நிவர் புயல் காரணமாக பெய்த கன மழையினால் 96 ஆயிரத்து 165 எக்டேர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் முழ்கி பாதிக்கப்பட்டன. இதற்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் அரசு நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் வரலாறு காணாத மார்கழி மாதம் பெய்த தொடர் கன மழையால் அறுவடைக்கு தயாரான சுமார் 50 ஆயிரம் எக்டேர் நெற்பயிர்கள் முற்றிலும் வயல்களில் சாய்ந்து தேங்கி நின்ற மழைநீரில் முழ்கியது. இதில் பல இடங்களில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகியும், முளைக்கவும் தொடங்கியது. இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் மழை நின்று காலம் கடந்து அறுவடை பணிகள் தொடங்கி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது அறுவடை எந்திரங்கள் தட்டுப்பாடு காரணமாக கூடுதல் கட்டணம் செலவு செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதில் மழை பாதிப்பினால் மகசூல் இழப்பு அதிகமாகியதால் அறுவடை கூலியை கூட சரிகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்று வாங்கிய கடனை சரி கட்ட முடியுமா? என்ற கவலையில் இருந்து வருகின்றனர்.இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 480 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து இதுவரை 3 லட்சத்து 16 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லாததால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. இதனை உடனுக்கு உடன் நகர்வு செய்யாததால் கொள்முதல் பணிகள் தேக்கமடைந்துள்ளன.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:- சம்பா அறுடை நேரத்தில் மழையினால் மகசூல் இழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. மேலும், அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறை காரணமாக கூடுதல் வாடகை கொடுத்து அறுவடை செய்துள்ளனர். கிடைத்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உடனடியாக விற்பனை செய்து வாங்கி கடனை அடைக்க முடியுமா? என்ற நிலையில் இருந்து வருகிறோம்.
ஆனால் சாக்கு தட்டுபாடு, லாரி பிரச்சினை காரணமாக நெல் மூட்டைகள் நகர்வு ஆகாததால் கொள்முதல் நிலையத்தில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இதன் காரணமாக கொள்முதல் நிலையத்தில் 12 நாட்களுக்கு மேல் நெல் மூட்டைகளுடன் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கும், நெல் கொள்முதல் ஊழியர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக நகர்வு செய்து, விவசாயிகளிடம் இருந்து தடையின்றி நெல்லை கொள்முதல் செய்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.