

புதுடெல்லி:
கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து கருப்பு பூஞ்சை தாக்குதல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. பல மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களில் 8 ஆயிரத்துக்கும் மேலான நபர்களுக்கு கருப்பு பூஞ்சை தாக்குதல் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு அளிக்கப்படும் ஸ்டிராய்டு மருந்துகளால் இந்த பாதிப்பு வருவதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் இந்த நோயை குணப்படுத்துவதற்கான மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உலகின் எந்த மூலையில் இருந்தாவது கருப்பு பூஞ்சை தாக்குதலுக்கான மருந்தை கொண்டு வாருங்கள் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
தற்போது அமெரிக்காவை சேர்ந்த கிலியட் என்ற மருந்து நிறுவனம் கருப்பு பூஞ்சை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி என்ற மருந்தை இந்தியாவுக்கு அனுப்பி வருகிறது. இதுவரை இந்த நிறுவனம் 1 லட்சத்து 21 ஆயிரம் மருந்து குப்பிகளை இந்தியாவுக்கு அனுப்பி உள்ளது.
மேலும் 85 ஆயிரம் குப்பிகள் ஓரிரு நாட்களில் இந்தியாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் கிலியட் நிறுவனம் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு 10 லட்சம் மருந்து குப்பிகளை அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆம்போ டெரிசின்-பி மருந்துக்கான தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த மருந்தை உள்நாட்டில் தயாரிப்பதற்காக 5 நிறுவனங்களுக்கு மத்திய அரசு உரிமம் வழங்கி உள்ளது.