ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் அருகே கார் குண்டு வெடிப்பு - 14 வீரர்கள் உடல் சிதறி பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 14 வீரர்கள் உடல் சிதறி பலியானார்கள்
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

காபூல்:

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தலீபான் பயங்கரவாத அமைப்பும் ஆப்கானிஸ்தான் அரசும் கத்தார் தலைநகர் தோஹாவில் 3 மாதங்களுக்கு மேலாக அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் குறிப்பிட்டு சொல்லும் வகையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஆப்கானிஸ்தானில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கார்ஹரில் பாகிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஷிர்ஷாத் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர்.

வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்த பயங்கரவாதிகள் அதை ராணுவ தளத்தின் நுழைவாயில் முன்பு நிறுத்தி வெடிக்கச் செய்தனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது.‌

இந்த குண்டுவெடிப்பில் 14 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.‌

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் கடந்த காலங்களில் இதுபோன்ற தாக்குதல்களை தலீபான் பயங்கரவாதிகள் நடத்தி இருப்பதால் இந்தத் தாக்குதலின் பின்னணியிலும் அவர்களே இருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com