உ.பி.யில் மேற்கூரை இடிந்து 27 பேர் சாவு : கட்டிட காண்டிராக்டர்-அதிகாரிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை

உத்தரபிரதேசத்தில் மேற்கூரை இடிந்து 27 பேர் இறந்த விவகாரத்தில், கட்டிட காண்டிராக்டர் மற்றும் அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் முராபத் நகரில், அரவிந்த் குமார் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு கட்டிடத்தில் தனது தாத்தாவுக்கான இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். சுமார் 50 பேர் அங்கு கூடியிருந்தனர். மாலை வேளையில் அந்த பகுதியில் நல்ல மழை பெய்தபோது, கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து, அங்கு கூடியிருந்தவர்களை மொத்தமாக அமுக்கியது. இதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிகிச்சை பெற்றுவந்தவர்களில் மேலும் 2 பேர் உயிரிழக்க நேற்று பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. இந்த கட்டிடம் 6 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது என்று தெரியவந்தது. புதிய கட்டிடமாக இருந்தாலும், தரமற்ற பொருட்களால் கட்டப்பட்டதால் விபத்து நடந்ததால், இந்த விவகாரம் பூதாகரமானது.

இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்ட மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நேற்று உத்தரவிட்டார். மேலும் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கவும் ஆணையிட்டார். இந்த தொகையை கட்டிட காண்டிராக்டர் மற்றும் அனுமதியளித்த அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்கவும் நடவடிக்கை எடுத்தார்.

இந்த விவகாரத்தில் கட்டிட காண்டிராக்டர் அஜய் தியாகி மற்றும் அரசு அதிகாரிகள் நிகாரிகா சிங், சந்தர்பால் சிங், ஆசி‌‌ஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. முதல்வர் உத்தரவை அடுத்து தற்போது இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com