தமிழக கவர்னர் மாளிகை சுத்த சைவமாக மாற்றம்: பன்வாரிலால் அதிரடி நடவடிக்கை

கவர்னர் மாளிகைக்குள்ளும், வளாகத்தின் பிற பகுதிகளிலும் யாரும் அசைவ உணவு சாப்பிட மற்றும் சமைக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முட்டைக்கு கூட கவர்னர் மாளிகைக்குள் அனுமதி இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
தமிழக கவர்னர் மாளிகை சுத்த சைவமாக மாற்றம்: பன்வாரிலால் அதிரடி நடவடிக்கை
Published on

சென்னை:

தமிழக கவர்னராக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த மாதம் 6-ந்தேதி பதவி ஏற்றார்.

தமிழக அரசியலில் விறுவிறுப்பு காணப்படும் நிலையில் அவர் கவர்னராக நியமிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வுகளை புரிந்து கொள்ள மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்த கவர்னர் பன்வாரிலால் தமிழ் மொழியை கற்றுக் கொள்ளத் தொடங்கி உள்ளார். ஆசிரியர் ஒருவர் அவருக்கு தமிழ் மொழி உச்சரிப்பை சொல்லிக் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் கவர்னர் பன்வாரிலால் தனது அதிரடி நடவடிக்கைகளை இந்த மாத தொடக்கத்தில் தொடங்கினார்.

தனக்கு யாரும் மலர் மாலைகள், பூங்கொத்துக்கள், சால்வைகள் தரக் கூடாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு அவர் யாரிடமும் பூங்கொத்து பெறுவதில்லை. அ.தி.மு.க. மூத்த அமைச்சர் ஒருவர் சந்தித்து பூங்கொத்து கொடுக்க வேண்டும் என்று அனுமதி கேட்ட போது, அவரை சந்திக்க மறுத்து விட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் கோவை சென்ற கவர்னர், பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்கள். இதற்கு பெரும் பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத கவர்னர் பன்வாரிலால் எதிர் வரும் நாட்களில் மற்ற மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு கூட்டங்கள் நடத்தப் போவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் கவர்னரின் வழக்கமான நடைமுறை, கவர்னர் மாளிகையில் மேற் கொள்ளப்படும் மரபுகள் அனைத்தையும் பன்வாரிலால் அதிரடியாக மாற்றி வருகிறார். குறிப்பாக கவர்னர் மாளிகையின் செயல்பாடுகள், மிகுந்த பலன் அளிப்பதாகவும், உரிய முறையில் இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

வழக்கமாக கவர்னர் டெல்லி சென்றால், அவருடன் கவர்னர் மாளிகை அதிகாரிகள் சுமார் 10 பேர் உடன் செல்வதுண்டு. சமீபத்தில் கவர்னர் டெல்லி சென்ற போது “எதற்கு வீண் செலவு. ஒரே ஒரு அதிகாரி என்னுடன் வந்தால் போதும் என்று கூறிவிட்டார்.

அவரது இந்த நடவடிக்கையால் கவர்னர் மாளிகை அதிகாரிகள் திணறலுக்குள்ளானார்கள். அந்த பரபரப்பு ஓய்வதற்குள் தற்போது பன்வாரிலால் மற்றொரு அதிரடி நடவடிக்கையை அமலுக்கு கொண்டு வந்துள்ளார். அதாவது கவர்னர் மாளிகையை சுத்த சைவ மண்டலமாக அவர் அறிவித்துள்ளார்.

கவர்னர் மாளிகைக்குள்ளும், வளாகத்தின் பிற பகுதிகளிலும் யாரும் அசைவ உணவு சாப்பிடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அசைவ உணவு சமைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முட்டைக்கு கூட கவர்னர் மாளிகைக்குள் அனுமதி இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

என்றாலும் கவர்னர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், அசைவம் சாப்பிட விரும்பினால் வெளியில் சென்று சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கவர்னர் மாளிகைக்கு விருந்தினராக வரும் மத்திய மந்திரிகள், உயர் அதிகாரிகளுக்கு சைவ உணவே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவர்னர் பன்வாரிலால் ராமர் மீது மிகுந்த பக்தி கொண்டவர். 1991-ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பா.ஜ.க. சார்பில் ஒரு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. அப்போது காங்கிரசில் இருந்த பன்வாரிலால் அந்த இயக்கத்துக்காகவே காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார்.

சுத்த சைவ உணவையே சாப்பிடும் அவர் அடுத்து கவர்னர் மாளிகை நிர்வாகத்திலும் அதிரடி மாற்றங்கள் செய்ய ஆலோசித்து வருகிறார். மாநில மந்திரி, மத்திய மந்திரி, பாதுகாப்புத்துறை ஆலோசனை குழு உறுப்பினர், தனிக்கட்சி நடத்தியவர், பத்திரிகையாளர் என பன்முக திறன் கொண்ட பன்வாரிலால் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் உயர் படிப்பு படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com