

புதுடெல்லி:
காவிரி மேலாண்மை வாரியம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இரண்டாம் கட்ட போராட்டத்தை கடந்த 38 நாளாக நடத்தி வருகிறார்கள்.
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தினம் ஒரு போராட்டத்தை கையில் எடுத்து நடத்தி வருகின்றனர். நேற்று அவர்கள் கொட்டும் மழையில் நனைந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ரோட்டிலேயே அமர்ந்து சாப்பிட்டனர். இதனை டெல்லி வாழ் மக்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்து சென்றனர்.
இந்த நிலையில் 39-வது நாளான இன்று தமிழக விவசாயிகள் பன்றிக்கறி சாப்பிடும் போராட்டம் நடத்தினர். கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி தண்ணீரை மத்திய அரசு தமிழகத்திற்கு பெற்றுத்தர மறுப்பதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
தமிழகத்திற்கு போதிய வறட்சி நிவாரணம் வழங்காமல் நதிகளை இணைத்து தண்ணீர் தரவில்லை போன்ற துரோகங்களை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விளைவிப்பதாக கூறிய விவசாயிகள் உண்ண உணவின்றி பன்றிக்கறி சாப்பிடும் நிலைமைக்கு ஆளாகி விட்டதாக அவர்கள் கூறினர்.
மேலும் ‘திங்க வச்சுட்டியே, திங்க வச்சுட்டியே, மோடியே தமிழக விவசாயிகளை பன்றிக்கறி திங்க வச்சுட்டியே’ என்று கோஷங்களும் எழுப்பினர். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.