டெல்லியில் சாலை மறியல்: தமிழக விவசாயிகள் 6-வது முறையாக கைது

டெல்லியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் நேற்று 6-வது முறையாக கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் சாலை மறியல்: தமிழக விவசாயிகள் 6-வது முறையாக கைது
Published on

புதுடெல்லி:

டெல்லியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் நேற்று 6-வது முறையாக கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று அவர்களது போராட்டம் 78-வது நாளை எட்டியது.

இதையொட்டி விவசாயிகளில் ஒருவர் கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்து அகோரி போல வேடமிட்டு இருந்தார். அவரிடம், போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.

பின்னர் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின்போது அகோரி வேடமிட்டவர், போலீஸ் தடுப்பு வேலி மீது ஏறி நிற்க, மற்ற விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த போராட்டம் பற்றி விவசாயிகள் கூறுகையில், ‘பிரதமர் மோடி விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார். ஆனால் அகோரிகளை சந்திக்கிறார். எனவேதான் அகோரி மூலம் பிரதமருக்கு கோரிக்கை மனுவை கொடுத்து அனுப்புகிறோம்’ என்றனர்.

இந்த நிலையில் நேற்று நண்பகலுக்கு பின்னர் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் அருகில் உள்ள சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். அங்கு இருந்த போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். பின்னர் அவர்கள் கன்னாட் பிளேஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com