

சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், கோமுகி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய பாசன நிலங்களுக்குப் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி, வேளாண் பெருங்குடிமக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடிமக்களின் வேண்டுகோளினை ஏற்று, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழைய மற்றும் புதிய பாசன நிலங்களின் பாசனத்திற்காக 22.10.2017 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.