எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் - ஈரோட்டில் 5000 ஜவுளி நிறுவனங்கள் மூடல்

தமிழகத்தில் இன்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் 5000 ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. #CauveryMangementBoard #TNBandh
எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் - ஈரோட்டில் 5000 ஜவுளி நிறுவனங்கள் மூடல்
Published on

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே மறியல் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் ஒருசில கடைகளை தவிர மற்ற கடைகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டுசேலை கடை, ராஜாஜி மார்க்கெட் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் 95% வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. பாளையங்கோட்டை காய்கறி சந்தை முழு அளவில் அடைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் பெரும்பாலான கடைகள் மற்றும் உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால், குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. அ.தி.மு.க. உள்ளிட்ட சில தொழிற்சங்கத்தினர் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். எனினும் அரசுப் பேருந்துகளை இயக்கக் கூடாது என தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலிருந்து புதுச்சேரி சென்ற, 4 தமிழக அரசுப் பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 10 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 5,000-க்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட பின்னலாடை நிறுவனம் மற்றும் பாத்திர தொழிலாளர்கள் சங்கத்தினர் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக ரூ.31.50 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com