செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து - ராஜஸ்தான் ஐகோர்ட் அதிரடி

செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டுவோரின் லைசென்சுகளை ரத்து செய்ய வேண்டும் என ராஜஸ்தான் மாநில ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. #TalkingAndDriving #LicenceCencelled #RajasthanHC
செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து - ராஜஸ்தான் ஐகோர்ட் அதிரடி
Published on

ஜெய்ப்பூர்:

சாலை விபத்துக்களில் பெரும்பாலான விபத்துக்கள் அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படுகிறது. குறிப்பாக செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டும்போது விபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த நிலை காணப்படுகிறது.

இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், பெரும்பாலான நபர்கள் அதனை கண்டுகொள்வதில்லை. இந்தியாவில் 2016-ம் ஆண்டில் மட்டும் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டும்போது ஏற்பட்ட விபத்துக்களில் 2138 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்நிலையில், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவோரை திருத்தும் முயற்சியாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜோத்பூர் கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதாவது, வாகனம் ஓட்டும்போது செல்போனில் யாராவது பேசினால் அவர்களை புகைப்படம் எடுத்து, உரிய சான்றுகளுடன் அதனை சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும், தவறு செய்த வாகன ஓட்டிகளின் லைசென்சை ரத்து செய்ய பரிந்துரைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

விசாரணைக்கு வரும்படி சம்பந்தப்பட்ட நபருக்கு வாய்ப்பு வழங்கி, அதன்பின்னர் அவரது லைசென்சை ரத்து செய்யும் நடவடிக்கையை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #MobileRelatedAccidents #TalkingAndDriving #LicenceCencelled #RajasthanHC

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com