தாளவாடி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

தாளவாடி அருகே மீண்டும் சிறுத்தை நடமாடியதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.
சிறுத்தை
சிறுத்தை
Published on

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்தில் தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம், மல்குத்திபுரம் உள்பட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று இங்குள்ள கிராமத்துக்குள் புகுந்து 10-க்கும் மேற்பட்ட ஆடுகளையும், 20-க்கும் மேற்பட்ட நாய்களையும் அடித்து கொன்று அட்டகாசம் செய்து வந்தது. இதைத்தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த நிலையில் சூசைபுரத்தை சேர்ந்த முத்தன் என்ற விவசாயி தன்னுடைய தோட்டத்துக்கு சென்று உள்ளார். அப்போது அவருடைய தோட்டத்தை சிறுத்தை ஒன்று கடந்து சென்றதை நேரில் கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஊருக்குள் வந்து நடந்ததை கூறினார். இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு பதிவான கால் தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தையின் கால் தடம்தான் என உறுதி செய்தனர். தாளவாடி அருகே மீண்டும் சிறுத்தை நடமாடியதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com