பாபர் மசூதிபோல் தாஜ் மஹாலும் வெடி வைத்து தகர்க்க சதி: ஆசம் கான் குற்றச்சாட்டு

கோர்ட் உத்தரவை மீறி பாபர் மசூதியை இடித்ததுபோல் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலையும் வெடி வைத்து தகர்க்க சதி நடந்து வருவதாக உ.பி.முன்னாள் மந்திரி குறிப்பிட்டுள்ளார்.
பாபர் மசூதிபோல் தாஜ் மஹாலும் வெடி வைத்து தகர்க்க சதி: ஆசம் கான் குற்றச்சாட்டு
Published on

லக்னோ:

துரோகிகளால் தாஜ் மஹால் கட்டப்பட்டு இருப்பதாகவும், அதை இந்திய வரலாற்று சின்னமாகவோ, நினைவு சின்னமாகவோ ஏற்க முடியாது, அது ஒரு அடிமை சின்னம் என்றும் எம்.எல்.ஏ. சங்கீத் சோம் கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அரசியல் தலைவர்கள் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.

தாஜ் மஹாலை கட்டியது துரோகிகள் என்றால், டெல்லி செங்கோட்டையையும் துரோகிகள்தான் கட்டியுள்ளனர். அதனால் அங்கு தேசியக் கொடியை ஏற்றுவதை மோடி நிறுத்துவாரா? என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளரும் உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் மந்திரியும், சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கு பேர்போனவருமான ஆசம் கான், நேற்று தனது காரசாரமான கருத்தை பதிவு செய்திருந்தார்.

அடிமைச் சின்னங்கள் அனைத்தும் அழிக்கபட வேண்டும் என நான் எப்போதுமே கருதி வந்துள்ளேன். அவ்வகையில், தாஜ் மஹால் மட்டுமல்லாமல், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை, செங்கோட்டை, பாராளுமன்ற கட்டிடம், குதுப் மினார் போன்றவையும் அடிமை சின்னங்கள் என்பதால், அவற்றையும் அழிக்க வேண்டும் என்று ஆசம் கான் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று ராம்பூரில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆசம் கான், தாஜ் மஹாலை வெடிவைத்து தகர்க்க சதி திட்டம் உருவாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

பாபர் மசூதி விவகாரத்திலும் முன்னர் இதேபோல் ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டது. பின்னர், கோர்ட் உத்தரவையும் மீறி பாபர் மசூதி இடித்து தள்ளப்பட்டது, அதேபோல், உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை வெடி வைத்து தகர்ப்பதற்கான சூழ்நிலையையும், நிர்பந்தத்தையும், நியாயத்தையும் அரசு உருவாக்கி வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com