

ரஞ்சி டிராபியில் விளையாடும் 28 அணிகளுக்கு இடையிலான டி20 டிராபி கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும் இந்த தொடருக்கு சையத் முஷ்டாக் அலி தொடர் என்று பெயர்.
இன்றைய தொடக்க ஆட்டத்தில் மேற்கு மண்டலத்தில் உள்ள மும்பை- பரோடா அணிகள் மோதின. டாஸ் வென்ற பரோடா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தேவ்தார், உர்வில் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தேவ்தார் 24 பந்தில் 38 ரன்னும், உர்வில் பட்டேல் 28 பந்தில் 50 ரன்களும் சேர்த்தனர்.
அதன்பின் வந்த கேப்டன் தீபக் ஹூடா 39 பந்தில் 66 ரன்னும், குருணால் பாண்டியா அவுட்டாகாமல் 26 பந்தில் 44 ரன்களும் எடுக்க பரோடா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.
பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பிஸ்டா 36 ரன்களும், 3-வது வீரர் சித்தேஷ் லாட் 82 ரன்களும், தபே 14 பந்தில் 33 ரன்களும் சேர்க்க மும்பை இலக்கை நோக்கி சென்றது. இருந்தாலும் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் பரோடா அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பரோடா அணி 4 புள்ளிகளை பெற்றுள்ளது.
மற்றொரு போட்டியில் குஜராத் - மகாராஷ்டிரா அணிகள் மோதின. மகாராஷ்டிரா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய குஜராத் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது. அக்சார் பட்டேல் 38 ரன்னும், காந்தி அவுட்டாகமல் 61 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மகாராஷ்டிரா களம் இறங்கியது. அந்த அணியின் நிகில் நாயக் அவுட்டாகாமல் 37 பந்தில் 70 ரன்கள் எடுக்க மகாராஷ்டிரா 3 பந்துகள் மீதமுள்ள நிலையில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.