சுஷ்மா சுவராஜ் பிரதமராக இருந்தால் எங்கள் நாடு மாறி இருக்கும் - பாகிஸ்தான் பெண் புகழாரம்

மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வர அனுமதித்த மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் எங்கள் நாட்டிற்கு பிரதமராக இருந்தால் நாடு மாறி இருக்கும் என பாகிஸ்தான் பெண் புகழாரம் சூட்டியுள்ளார்
சுஷ்மா சுவராஜ் பிரதமராக இருந்தால் எங்கள் நாடு மாறி இருக்கும் - பாகிஸ்தான் பெண் புகழாரம்
Published on

புதுடெல்லி:

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிஜாப் அசிஃப் என்ற பெண் ஈரல் தொற்றுநோயால் அவதியுற்று வந்தார். அவருக்கு பாகிஸ்தானில் சிகிச்சை அளிக்க வசதி இல்லாததால் இந்தியாவிற்கு சென்று சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் தற்போது எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக ஹிஜாப் அசிஃப்க்கு ‘விசா’ அளிக்க இந்திய அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

எனவே, அவர் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் உதவியை நாடினர். அதையடுத்து அவரது தலையீட்டின் பேரில் இந்தியா வர விசா அளிப்பதாக  இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்தது. மேலும் அந்த பெண்ணிற்கு விசா அளிப்பதற்கான பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அந்தப் பெண் டுவிட்டரில் தனது சுஷ்மா சுவராஜுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். அதில் அவர், ’சுஷ்மா சுவராஜ் எங்கள் நாட்டிற்கு பிரதமராக வந்தால் எங்கள் நாடு மாறி இருக்கும். மேலும் சுஷ்மா சுவராஜை எவ்வாறு அழைப்பது?அதிக சக்தி வாய்ந்த பெண்மணி? அவரது கருணை மற்றும் பெருந்தன்மையை வர்ணிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை! அவரை என் கண்ணீரால் வாழ்த்துவதை நிறுத்த முடியவில்லை!!!’ என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com