

புதுடெல்லி:
கென்யாவில் இந்திய வாலிபர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளார்.
கென்யாவில் உள்ள நைரோபியில் வசித்து வருபவர் பண்டி ஷா. இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் அங்குள்ள பாப்மில் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே, கடந்த வாரம் வீட்டில் இருந்த பண்டி ஷா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக நேத்ரா பாரிக் என்பவர் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மாவுக்கு டுவிட்டரில் புகார் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பண்டி ஷா குடும்பத்துக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், கென்யாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டார். அங்குள்ள இந்திய அதிகாரி சுசித்ரா துரையிடம், கென்யாவில் இந்திய வம்சாவளி மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த அறிக்கை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதேபோல், தென் ஆப்ரிக்காவில் சுற்றுலா சென்றபோது இறந்த இந்தியரின் குடும்பத்துக்கு உதவும்படி அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளையும் சுஷ்மா சுவராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.