இந்திய பொறியாளர்கள் கடத்தல் - ஆப்கன் உதவியை நாடிய வெளியுறவு துறை

தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 7 இந்தியர்களை மீட்கும் பணிகளில் ஆப்கானிஸ்தான் அரசின் உதவியை நாடியுள்ளதாக வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். #Afganistan #IndiansAbduct #SushmaSwaraj
இந்திய பொறியாளர்கள் கடத்தல் - ஆப்கன் உதவியை நாடிய வெளியுறவு துறை
Published on

காபூல்:

ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் உள்ள சேஷ்மா இ ஷெர் பகுதியில் உள்ள துணை மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றி வந்த இந்தியப் பொறியாளர்கள் 7 பேரை தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்திச் சென்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசைத் தொடர்பு கொண்டு பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதுகுறித்து ஆப்கன் நாட்டு தூதரக அதிகாரிகளிடம் சுஷ்மா சுவராஜ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கூறுகையில், தலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து கடத்தப்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். உள்ளூரைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு தலிபான்களின் நடமாட்டம், இருப்பிடம் ஓரளவு தெரியும். எனவே அவர்களது உதவியுடன் இந்தியர்களையும் கண்டறியும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்தியர்கள் மட்டுமன்றி அவர்கள் சென்ற பேருந்தை இயக்கிச் சென்ற ஆப்கனைச் சேர்ந்த ஓட்டுநரையும் பயங்கரவாதிகள் கடத்தியுள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் நடப்பதால் விரைவில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர். #Afganistan #IndiansAbduct #SushmaSwaraj

X

Maalai Malar
www.maalaimalar.com