சுஷாந்த் பணத்துக்காக குறிவைக்கப்பட்டு இருக்கலாம்- நண்பர் அதிர்ச்சி தகவல்

சுஷாந்த் பணத்துக்காக குறிவைக்கப்பட்டு இருக்கலாம் என்று அவரது நண்பர் யுவராஜ் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்
Published on

மும்பை:

இந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஜூன் 14ந்தேதி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். விசாரணையில், அவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் அல்லது கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரபோர்த்தி உட்பட அவருக்கு நெருக்கமான சிலர் போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், ரியா சக்கரபோர்த்தி, அவரது சகோதரர் சோவிக் சக்கரபோர்த்தி உள்ளிட்ட 9 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் சுஷாந்த் குறிவைக்கப்படுவதாக அவரது நண்பர் யுவராஜ் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

நாங்கள் இருவரும் ஒன்றாக பல நடிப்பு தேர்வுகளுக்கு சென்றுள்ளோம். சுஷாந்த் உடன் எனக்கு ஏராளமான நினைவுகள் உள்ளன. நாங்கள் இருவரும் தினமும் ஆடி‌ஷனிலோ அல்லது வேறு ஏதாவது ஒன்றுக்காகவோ சந்தித்துக் கொள்வது உண்டு. அப்படித்தான் அவர் எனக்கு பழக்கமானார்.

இப்போது நடக்கும் போதைப்பொருள் விவகாரங்களை பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த வழக்கை பார்க்கும்போது, அது திட்டமிட்டு சுஷாந்த் குறிவைக்கப்பட்டிருப்பது நன்றாக தெரிகிறது. பணத்துக்காகவும், முதலீடுகளுக்காகவும் சுஷாந்த்தை சிலர் குறிவைத்துள்ளனர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அவர் எப்போதும் மன உளைச்சலில் இருந்து நான் பார்த்ததில்லை.

இவ்வாறு யுவராஜ் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com