ரோஹிங்கியா முஸ்லிம்கள் வருகை: வடகிழக்கு மாநில எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

மியான்மரில் வன்முறை காரணமாக வெளியேறும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவில் தஞ்சமடைய கூடும் என்பதால், வடகிழக்கு மாநில எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் வருகை: வடகிழக்கு மாநில எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
Published on

புதுடெல்லி:

மியான்மரில் தொடரும் வன்முறைகளினால் அந்நாட்டை விட்டு வெளியேறும் ரோஹிங்கியா அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்த வகையில், கடந்த ஒரு மாதத்தில் வங்கதேசத்தில் தஞ்சமடைந்த ரோஹிங்கியா முஸ்லீம்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டியுள்ளது. வடகிழக்கு இந்திய மாநிலங்களானது வங்கதேசம், மியான்மர், சீனா, பூடான் உள்ளிட்ட நாடுகளுடன் 4500 கி.மீ. எல்லை தூரத்துக்கு உள்ளடக்கியுள்ளது.

இதில் இந்தியா- மியான்மர் இடையேயான எல்லைப் பகுதி மட்டும் 1,643 கி.மீ. தூரம், மிசோரம், மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சல பிரதேசம் மாநிலங்களை ஒட்டிய பல சர்வதேச எல்லைப் பகுதிகள் வேலிகளற்றதாக உள்ளன.

இந்த எல்லைகளில் 16 கி.மீ. தூரம் வரை உள்ளூர் இன மக்கள் விசா இன்றி பயணிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனை பயன்படுத்தி அகதிகள் இந்தியாவிற்குள் நுழைவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எற்கனவே இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள 40 ஆயிரம் ரோகிங்கிய அகதிகளை நாடு கடத்தும் திட்டத்தை இந்தியாவின் உள்துறை அமைச்சகம் முன் வைத்துள்ள நிலையில் எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுடன் தொடர்பில் இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் சந்தேகப்படுகிறது. ரோஹிங்கியா அகதிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் இந்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

வங்க தேசத்தில் பெருமளவிலான ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைவது போன்று இந்தியாவிற்குள்ளும் அவர்கள் தஞ்சமடையக் கூடும் என இந்திய எல்லைப்பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மணிப்பூரில் உள்ள எல்லையோரப் பகுதிகளில் வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிப்பூர் ஜிரிபம் பகுதியில் உள்ள 1211 வீடுகளை சோதனையிட்டதில் 265 பேர் சந்தேகத்திற்குரியவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் 107 பேர் இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்துள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள 22 ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு நாடு கடத்த மத்திய அரசிற்கு மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

அசாமின் எல்லையோரப் பகுதிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com