பயணிகள் பாதுகாப்புக்காக மாநகர பஸ்களில் கண்காணிப்பு கேமிரா

சென்னையில் உள்ள 3,300 மாநகர பஸ்களிலும் ரூ.75 கோடியில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்த மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கண்காணிப்பு கேமிரா
கண்காணிப்பு கேமிரா
Published on

சென்னை:

சென்னையில் கல்லூரி மாணவர்கள் மாநகர பஸ்களில் பயணம் செய்யும் போது ஏற்படும் மோதலை தடுப்பதற்காகவும் பஸ்களில் குற்ற சம்பவங்கள், திருட்டு, ஈவ்டீசிங், ஏற்படாமல் தடுக்க முன் முயற்சியாக சி.சி.டி.சி. கேமிராக்களை போலீசார் பொருத்தி உள்ளனர்.

பூந்தமல்லி-பிராட்வேக்கு சைதாப்பேட்டை வழியாக செல்லும் 54எல் பஸ்சில் 3 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அடையாறு போலீஸ் துணை கமி‌ஷனர் பகலவன், சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோரின் முயற்சியால் 54எல் மாநகர பஸ்சில் 3 கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

ஒரு கேமிரா வெளிப்புறமாகவும் 2 கேமிராக்கள் பஸ்சின் உள்புறமாகவும், டிரைவர் இருக்கைக்கு இடது புறத்திலும் பின்புற முனை இடது பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

நந்தனம் அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் இந்த பஸ்சில் பயணம் செய்து வருகிறார்கள். இதில் மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுவார்கள். இதனை தடுக்கவே கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பஸ்சில் மோதல் சம்பவங்கள், திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் கேமிராவில் பதிவாகிவிடும்.

இந்த கேமிராக்களில் 15 நாட்களுக்கான காட்சிகள் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். அதன் அடிப்படையில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை எளிதில் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க பயன் உள்ளதாக இருக்கும்.

இதேபோல 23சி, 18 கே.வழித்தட பஸ்களிலும் கேமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள 3,300 மாநகர பஸ்களிலும் ரூ.75 கோடியில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்த மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான டெண்டர் விரைவில் விடப்படும் என்று மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com