ஓ.பன்னீர்செல்வம், 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு: செம்மலையின் கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்து சென்னை ஐகோர்ட்டில் நடந்து வரும் வழக்கின் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக் கோரும் செம்மலையின் கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
Published on

புதுடெல்லி:

கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேரும் வாக்களித்தனர்.

அவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி, தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் அண்மையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. செம்மலை, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கு சபாநாயகரின் அதிகார வரம்பை கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக ஆந்திர எம்.எல்.ஏ. ஒருவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வின் விசாரணையில் உள்ளது. எனவே இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரிக்க தடை விதித்து, ஆந்திர வழக்குடன் சேர்த்து சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கவேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

செம்மலை தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி தனது வாதத்தில், நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த 12 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகருக்கு உத்தரவிடுமாறு எதிர்தரப்பினரின் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இது ஐகோர்ட்டு வரம்புக்குள் வராது. எனவே, இந்த வழக்கின் மீதான விசாரணையையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றவேண்டும் என்று வாதிட்டார்.

இதற்கு எதிர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, “ஐகோர்ட்டில் எங்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், சபாநாயகரின் அதிகாரம் குறித்த கேள்வி எதையும் நாங்கள் எழுப்பவில்லை. இந்த வழக்கை ஐகோர்ட்டே விசாரித்து எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து தீர்ப்பு வழங்கவேண்டும் என்று மனு திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அந்த மனுவே அங்கு விசாரணையில் உள்ளது. எனவே, இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றத் தேவை இல்லை” என்று வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டே முடிவு எடுக்கவேண்டும் என்று மனு திருத்தப்பட்டு உள்ளதால் இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்க இயலாது. அதே நேரத்தில் ஐகோர்ட்டு சபாநாயகரின் அதிகார வரம்பு பற்றி எதுவும் தங்களது விசாரணைக்குள் செல்லாமல் இந்த மனுவை தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யவேண்டும். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு நிராகரிக்கப்படுகிறது” என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com