மருத்துவகுழு அமைத்து நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

நீதிபதி கர்ணனின் மன நலம் குறித்து மருத்துவ பரிசோதனை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவகுழு அமைத்து நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
Published on

புதுடெல்லி:

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் தற்போது கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் சக நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக பரபரப்பு ஊழல் புகார்களை வெளியிட்டு பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினார்.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததுடன் கோர்ட்டில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

ஆனால் நீதிபதி கர்ணன் ஆஜராக மறுத்து விட்டார். இதனால் அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு வாரண்டு பிறப்பித்தது. அதன்பிறகு நீதிபதி கர்ணன் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுடன் காரசார வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். எந்த உத்தரவையும் ஏற்க மாட்டேன் என்று மறுத்தார்.

இதையடுத்து நீதிபதி கர்ணனின் மனநிலை குறித்த மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டி வரும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

இந்த நிலையில் நீதிபதி கர்ணனின் நடவடிக்கைகள் தொடர்ந்தது. தனக்கு எதிரான வழக்கை நடத்தி வரும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் 7 நீதிபதிகள் ஏப்ரல் 28-ந்தேதி தன் முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்பிறகு அவர் புதிய உத்தரவுகள் பிறப்பித்தார். அதில் ஏப்ரல் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆஜராகாததால் அவர்கள் மீண்டும் மே 1-ந்தேதி (இன்று) ஆஜராக வேண்டும். அத்துடன் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளும் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என்று விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இது நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நீதிபதி கர்ணன் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கர்ணனின் நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள் வருமாறு:-

நீதிபதி கர்ணனின் மன நலம் குறித்து வருகிற 5-ந்தேதி மருத்துவ குழு அமைத்து பரி சோதனை செய்ய வேண்டும், இந்த மருத்துவ குழுவை கொல்கத்தா அரசு மருத்துவமனை நியமித்து தனது அறிக்கையை மே 8-ந்தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.

நீதிபதி கர்ணனிடம் மருத்துவ பரிசோதனை நடத்தும் மருத்துவ குழுவினருக்கு மேற்கு வங்காள டி.ஜி.பி., உயர் போலீஸ் அதிகாரிகள் குழுவை நியமித்து உதவ வேண்டும்.

இது தொடர்பாக நீதிபதி கர்ணன் தனது பதிலை சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். அவர் தனது விருப்பத்தை தெரிவிக்காவிட்டால் மேற்கொண்டு அவரிடம் எந்த விளக்கமும் பெறத் தேவையில்லை என்ற முடிவை சுப்ரீம்கோர்ட்டு எடுக்கும்.

மேலும் பிப்ரவரி 8-ந் தேதிக்குப் பின்பு நீதிபதி கர்ணன் பிறப்பித்த எந்த உத் தரவையும் நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளோ, நடுவர் மன்றங்களோ, கமி ஷன்களோ செயல்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com