கோடை விடுமுறையால் நெரிசல்: இரவு நேரத்தில் கூடுதலாக அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படும்

கோடை விடுமுறையில் கூட்ட நெரிசலை சமாளிக்க தென் மாவட்டங்களுக்கு இரவு நேரங்களில் கூடுதலாக அரசு விரைவு பஸ்களை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆம்னி பஸ்களின் கட்டண கொள்ளையை முறியடிக்க முடியும்.
கோடை விடுமுறையால் நெரிசல்: இரவு நேரத்தில் கூடுதலாக அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படும்
Published on

சென்னை:

கோடை விடுமுறை விடப்பட்டதால் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்களிலும் இடம் கிடைப்பது இல்லை.

அதனால் அரசு பஸ்களை நாடிச் செல்கிறார்கள். தற்போது அரசு விரைவு பஸ்களிலும் நிரம்பி விடுகின்றன.

நீண்ட தூரம் செல்லக் கூடிய விரைவு பஸ்களுக்கு 2 மாதங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் திட்டம் உள்ளதால் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, கன்னியாகுமரி மற்றும் கோவை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது.

அரசு பஸ், ரெயில்களில் இடம் கிடைக்காதாவர்கள் ஆம்னி பஸ்களை நாடும் போது அதில் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வார இறுதி நாளான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் செல்ல இடம் கிடைக்காமல் அலையும் பொதுமக்களிடம் ரூ.1,500, ரூ.2000, ரூ.3000 வரை கட்டண கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில் கோடை விடுமுறை கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு அரசு விரைவு பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

www.tnstc.in என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்தவர்கள் எத்தனை பேர், எந்தெந்த பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் இடங்கள் நிரம்பி உள்ளன என்பதை ஆய்வு செய்து அதற்கேற்றவாறு தேவையான இடங்களுக்கு பஸ்கள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனால் இரவு நேரத்தில் செல்லும் விரைவு பஸ்களின் எண்ணிக்கை கூடுதலாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1083 பஸ்கள் தினமும் இயக்கப்படுகிறது. இதில் 475 பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி, பெங்களூர், கோவை, வேளாங்கண்ணி செல்லும் பஸ்கள் நிரம்பி விடுகின்றன.

எந்த பகுதிக்கு பஸ் தேவைப்படுகிறது என்று முன்பதிவு விவரங்களை ஆய்வு செய்து கூடுதலாக 100 பஸ்கள் வரை இயக்கப்டுகின்றன. தேவையறிந்து அந்த பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் விடப்படும். அதனால் இரவு நேரத்தில் பஸ் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com