

6 நாடுகள் பங்கேற்று விளையாடி வரும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா அயர்லாந்தை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கி்டைத்தது. இதை பயன்படுத்தி இந்தியாவின் ராமன்தீப் சிங் கோல் அடித்தார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது. அடுத்த சில நிமிடங்களில் மேலும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதில் இந்தியா கோல் அடிக்க தவறியது. இதனால் முதல் காலிறுதி நேரத்தில் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
2-வது காலிறுதி நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதனால் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. 3-வது காலிறுதி ஆட்டத்தில் அயர்லாந்து இரண்டு கோல்கள் அடிக்க இந்தியா 2-3 என பின்தங்கியது. கடைசி காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் அயர்லாந்து 3-2 என இந்தியாவை தோற்கடித்தது. இந்தியா ஒரு வெற்றி, இரண்டு தோல்வி, ஒரு டிராவுடன் இறுதி வாய்ப்பை இழந்தது.