பாலில் எலி மருந்து கலந்து குடித்த தாய்-மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பாலில் எலி மருந்து கலந்து குடித்த தாய்-மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மன்னார்குடி அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய்-மகன்-மகள் ஆகியோர் பலியான சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் ஆலமுத்து. இவருடைய மனைவி தமிழரசி(வயது 30). இவர்களது மகன் ஷியாம் (11). 6-ம் வகுப்பு படித்து வருகிறான். மகள் மனிஷா(9). 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.

தமிழரசியும், ஆலமுத்துவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆலமுத்து வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். உடல் நிலை சரியில்லாததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆலமுத்து இறந்து விட்டார். தற்போது தமிழரசி ஒரு ஸ்டூடியோவில் வேலை பார்த்து வருகிறார்.

கணவருடைய மருத்துவ செலவுகளுக்காக தமிழரசி பலரிடம் கடன் வாங்கி இருந்தார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தமிழரசியை தொந்தரவு செய்து வந்தனர். கடன் தொல்லையால் மனவேதனை அடைந்த தமிழரசி கடந்த 24-ந்தேதி தனது குழந்தைகளுக்கு பாலில் எலி மருந்தை கொடுத்து தானும் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதில் ஆபத்தான நிலையில் இருந்த தமிழரசி மற்றும் அவருடைய குழந்தைகள் உள்பட 3 பேரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிறுவன் ஷியாம் சிகிச்சை பலனின்றி கடந்த 26-ந்தேதி பரிதாபமாக இறந்தான்.

இந்த நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழரசி, மகள் மனிஷா ஆகியோர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய்-மகன்-மகள் ஆகியோர் பலியான சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com