ஆரணி அருகே தடுப்பூசி போடப்பட்ட குழந்தை திடீர் உயிரிழப்பு

ஆரணி அருகே தடுப்பூசி போடப்பட்ட குழந்தை திடீரென இறந்ததால் ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஆரணி:

ஆரணி அருகே உள்ள விளை கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி. லாரி டிரைவர். இவருடைய மனைவி தமிழரசி. தம்பதிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு லித்தேஷ் என பெயர் வைத்தனர். நேற்று நெசல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் புதுப்பட்டு கிராமத்தில் மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் தமிழரசி அவரது குழந்தைக்கு தடுப்பூசி போட கொண்டு சென்றார்.

குழந்தைக்கு சளி இருந்தது. இதுபற்றி டாக்டரிடம் ஆலோசிக்காமல் நர்சு தடுப்பு ஊசி போட்டுள்ளார். அதற்குப் பிறகு குழந்தை சோர்வாக இருந்துள்ளது. இரவு குழந்தை அழுதுள்ளது. அதற்கு பால் கொடுத்து விட்டு தூங்க வைத்துள்ளனர்.

அதிகாலை 3 மணிக்கு பார்த்த போது குழந்தை அசைவு இல்லாமல் இருந்தது. இதனையடுத்து குழந்தையை ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

டாக்டரிடம் ஆலோசிக்காமல் தடுப்பூசி போட்டதால்தான் தான் குழந்தை இறந்ததாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை நெசல் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பூசி போட்ட குழந்தை இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com