சப்-இன்ஸ்பெக்டர் கொலை: திட்டத்திற்கான ரகசிய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யார்?

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை திட்டத்திற்காக காயல்பட்டினத்தில் நடைபெற்ற ரகசிய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் குறித்து பயங்கரவாதிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கைதான பயங்கரவாதிகளை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்
கைதான பயங்கரவாதிகளை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்
Published on

களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8-ந் தேதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக தவுபீக், அப்துல் சமீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கடந்த 21-ந்தேதி முதல் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

களியக்காவிளை சோதனைச்சாவடியில் எஸ்.ஐ. வில்சனை கொலை செய்தது எப்படி? என்பதை அவர்கள் நடித்துக்காட்டினர். அதனை போலீசார் வீடியோவில் பதிவு செய்துகொண்டனர்.

எஸ்.ஐ. வில்சனை கொலை செய்ய சதி திட்டம் எங்கு தீட்டப்பட்டது என்பது பற்றி நேற்று முன்தினம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காயல்பட்டினத்தில் நடந்த ரகசிய கூட்டத்தில் இது பற்றி பேசப்பட்டதாக, தவுபீக் கூறினார். நேற்று தனிப்படை போலீசார் தவுபீக்கை காயல்பட்டினம் அழைத்துச் சென்றனர்.

காயல்பட்டினத்தில் செய்யதுஅலி நவாசின் மனைவி வீடு உள்ளது. டெல்லியில் செய்யதுஅலி நவாஸ் கைது ஆகும் முன்பு அவர் காயல்பட்டினம் வந்துள்ளார். அப்போது, தவுபீக்கும் அங்குச் சென்று செய்யது அலி நவாசை சந்தித்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்த சந்திப்பு நடந்துள்ளது. அப்போது செய்யதுஅலிநவாஸ், தவுபீக் ஆகியோருடன் மேலும் சிலர் அக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டம் வகுக்கப்பட்டது.

அந்த திட்டத்தை செயல்படுத்தும் முன்பே அவர்களை போலீசார் கைது செய்துவிட்டனர். எனவே போலீசாரை மிரட்ட, அவர்களில் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாக பயங்கரவாதிகள் இருவரும் கூறியுள்ளனர்.

இதையடுத்து காயல்பட்டினத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யார்? யார்? என்பதை கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே எஸ்.ஐ.வில்சன் கொலையில் வெளிநாட்டு நபர்களுக்கும் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. அமைப்பின் அதிகாரிகளும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

என்.ஐ.ஏ.வின் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் கேரள மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அனிஷ் ஆகியோர் நாகர்கோவில் வந்துள்ளனர்.

அவர்கள் தவுபீக், அப்துல் சமீம் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது

இதற்கிடையே அப்துல் சமீம், தவுபீக் இருவரின் போலீஸ் காவலும் வருகிற 31-ந்தேதியுடன் முடிகிறது. எனவே இவர்களின் காவலை மேலும் நீட்டிக்க போலீசார் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com