

புதுடெல்லி:
தற்போது சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழி கொள்கையின் கீழ் பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன. இதில் நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்றுள்ள 18 ஆயிரம் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தாய் மொழி அல்லது இந்தி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் அல்லது ஜெர்மன் போன்ற ஏதாவது 3 மொழிகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
புதிய தேசிய கல்வி கொள்கையின்படி இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, நவீன இந்திய மொழி, மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும், இந்தி பேசாத மாநிலங்களில் மாநில மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழி என்னும் அடிப்படையில் மும்மொழியில் பாடங்கள் கற்றுத்தரப்படவேண்டும். எனவே பிரெஞ்ச், ஜெர்மன், மாண்டரின் போன்ற வெளிநாட்டு மொழிகளில் பாடங்களை சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நடத்தினால் இந்த மொழிகள் இனி 4-வது மற்றும் 5-வது மொழிகளாகத்தான் இருக்கும் என்றும், இவை மும்மொழியின் கீழ் வராது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்தது. அப்போது அடுத்த கல்வி ஆண்டு (2018-19) முதல் இந்த நடைமுறையை அறிமுகம் செய்யுமாறு உத்தரவிட்டது.