அய்யம்பேட்டை அருகே நண்பர்களுடன் ஆற்றில் குளித்த மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி

அய்யம்பேட்டை அருகே நண்பர்களுடன் ஆற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

அய்யம்பேட்டை:

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே கோபாலபுரம் பழைய காலனி தெருவை சேர்ந்தவர் அற்புதராஜ். இவரது மகன் வினோத் என்கிற பாரதி நிக்கோலஸ் (வயது 16). இவர் அய்யம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் ராகேஷ், பிரதீப் ஆகியோருடன் வழுத்தூர் குடமுருட்டி ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது வினோத் ஆற்றின்ஆழமான பகுதிக்கு சென்று விட்டார்.

இதில் அவர் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தார். இதைக்கண்ட ராகேஷ் மற்றும் பிரதீப் ஊர்மக்களுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த கிராம மக்கள் ஆற்றில் குதித்து பலியான வினோத் உடலை மீட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால்சோழன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வினோத் உடலை கைப்பற்றி அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com