தஞ்சை அருகே ரெயில் மோதி ஆற்றில் விழுந்த மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி

தஞ்சை அருகே ரெயில் மோதி ஆற்றில் விழுந்த மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் பலி
வாலிபர் பலி
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையம் வடக்கு மூப்பனார் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் கவிராஜ்(வயது 12), தஞ்சாவூரில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

தஞ்சாவூர்-ஆலக்குடிக்கு இடையே ரெட்டிப்பாளையம் ரெயில்வே மேம்பாலம் அருகே புது ஆற்றின் குறுக்கே செல்லும் ரெயில் தண்டவாளத்தில் நண்பர்களுடன் நேற்று கவிரான் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, கோவையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் வருவதைக் கண்ட கவிராஜின் நண்பர்கள் தண்டவாளத்தின் அமைக்கப்பட்ட மேடைக்கு சென்று விட்டனர்.

ஆனால், கவிராஜ் அங்கு செல்வதற்குள், அவர் மீது ரெயில் மோதியது. இதில் காயங்களுடன் கவிராஜ் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்டார். ஆற்றில் தண்ணீர் அதிகமாகச் சென்றதால், அவரை இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த சிலர், ஆற்றுக்குள் குதித்து கவிராஜை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். ஆனால், அதற்குள் கவிராஜ் இறந்து விட்டார்.

இதுபற்றி தகவலறிந்த தஞ்சாவூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் அங்கு சென்று, கவிராஜின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com