திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தை சுத்தம் செய்த மாணவன் - பள்ளிக்கே சென்று பாராட்டிய கலெக்டர்

திருவண்ணாமலையில் தன்னார்வத்துடன் தூய்மைப்பணி மேற்கொண்ட மாணவனை பள்ளிக்கே நேரில் சென்று கலெக்டர் பாராட்டினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தை சுத்தம் செய்த மாணவன் - பள்ளிக்கே சென்று பாராட்டிய கலெக்டர்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த 6-ந் தேதி ஒரு மாணவன் தனது தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது கலெக்டர் அலுவலக வளாகம், கலெக்டர் பங்களா அதனை சுற்றியுள்ள பகுதியில் குப்பைகள் இருந்ததை பார்த்த அந்த மாணவன், தானாக முன்வந்து அங்கிருந்த மரக்கிளையினை உடைத்து, அதன் மூலம் சுமார் 20 நிமிடம் அந்த சாலை முழுவதையும் சுத்தம் செய்து, தூய்மை பணியில் ஈடுபடுத்திக் கொண்டான்.

இது குறித்து தெரிய வந்ததும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்ட கலெக்டர் கந்தசாமி அந்த மாணவன் குறித்த விவரங்களை சேகரிக்க சொன்னார்.

அந்த மாணவன் பெயர் ராம கிருஷ்ணன், என்பதும், அவன் திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கலெக்டர் அந்த மாணவன் படிக்கும் பள்ளிக்கு சென்றார். அங்கு, மாணவன் ராமகிருஷ்ணன் படிக்கும் வகுப்புக்கு சென்று அவனுக்கு பூங்கொத்து வழங்கி பாராட்டினார்.

அப்போது கலெக்டரிடம் மாணவன் ராமகிருஷ்ணன் ‘‘நான் வேங்கிக்கால் பகுதியில் கலெக்டர் அலுவலகம் அருகே ஜெய்பீம் நகரில் வசித்து வருகிறேன்.

தந்தை எங்களுடன் இல்லை. கடந்த 6-ந் தேதி கலெக்டர் அலுவலக வளாக சாலையில் நானும் எனது தம்பியும் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த சாலையில் குப்பைகள் இருந்ததை பார்த்தேன். உடனே அங்கிருந்த மரக்கிளை ஒன்றை உடைத்து அந்த சாலையினை சுத்தம் செய்தேன்.

நமது வீடு மட்டும் இல்லாமல், நமது சுற்றுப் புறத்தையும் நாம் சுத்தமாக, சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் கூறினர். அதனால் தூய்மை பணியில் ஈடுபட்டேன்’’ என்றான்.

இதனை தொடர்ந்து கலெக்டர் அப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர் களையும் வரவழைத்து பள்ளிக்கு வந்ததன் நோக்கம் குறித்தும், மாணவன் ராம கிருஷ்ணன் செய்துள்ள தூய்மை பணி குறித்தும் எடுத்துரைத்தார்.

அப்போது கலெக்டர் பேசுகையில், ராமகிருஷ்ணனை போன்று எதையும் எதிர் பார்க்காமல் மனதில் படுவதை உடனடியாக தயக்கமின்றி அனைவரும் செய்ய வேண்டும்.

மாணவன் ராம கிருஷ்ணனை தனியாக சந்தித்து வாழ்த்த வேண்டும் என்பதற்கு பதிலாக, பள்ளிக்கு சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தேன்.

மாணவன் ராமகிருஷ்ணனை போல் நல்ல பண்புகள், சமுதாய சிந்தனைகள் இருந்தால் நாம் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்குவோம். நீங்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com