மத்திய அரசு புறக்கணிப்பதாக தொழு நோயாளி வேடமணிந்து கதிராமங்கல பொதுமக்கள் போராட்டம்
திருவிடைமருதூர்:
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுதலை செய்யக்கோரியும், கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரியும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 17-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், ராஜேந்திரன், அமுதா, மக்கள் சேவை இயக்கத்தின் அகில இந்திய தலைவர் தங்கசண்முகசுந்தரம், மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 5 பேரும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உண்ணாவிரதத்தை தொடங்கினர். இவர்களுக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் நேற்று உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் இன்று 2-வது நாளாக உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.
கதிராமங்கலத்தில் நேற்று மக்கள் சேவை இயக்கம் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கை, கால்களில் மஞ்சள் துணியை கட்டி தொழுநோயாளிகள் போல் வேடமணிந்து இருந்தனர். கோரிக்கைகளை ஏற்காத மத்திய அரசு, விவசாயிகளை தொழுநோயாளிகள்போல் புறக்கணிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
கதிராமங்கலத்தில் இன்று 18-வது நாளாக நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தில் லட்சிய தி.முக. தலைவர் டி.ராஜேந்தர் கலந்து கொள்கிறார்.

