மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாநிலங்களில் சச்சரவுகள் அதிகரித்து வருகிறது: ராகுல் குற்றச்சாட்டு

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி வந்ததில் இருந்து, பல மாநிலங்களில் சச்சரவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாநிலங்களில் சச்சரவுகள் அதிகரித்து வருகிறது: ராகுல் குற்றச்சாட்டு
Published on

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்து கொண்டு பழங்குடி மக்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பனாமா பேப்பர் ஊழல் தொடர்பான பட்டியலில் இடம் பெற்றதால், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரியின் மகன் பெயர் பனாமா பேப்பர் தொடர்பான பட்டியலில் உள்ளது. ஆனாலும் அவர்மீது பா.ஜ.க. அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் ஊழல் குறித்து நீண்ட நேரம் பேசி வருகிறார். ஆனால் மோடிக்கு சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ராமன் சிங் கண்ணுக்கு தெரியவில்லையா?

மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி வந்ததில் இருந்து, பல மாநிலங்களில் சச்சரவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வந்த தீவிரவாத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதி கொண்டு வரப்பட்டது.

நாங்கள் 2004ல் ஆட்சிக்கு வந்தபோது, ஜம்மு காஷ்மீரில் நிலவிய வன்முறை சம்பவங்களை படிப்படியாக குறைத்து முடிவுக்கு கொண்டு வந்தோம். ஆனால் இப்போது ஸ்ரீநகர், சிக்கிம், பாஸ்டர் என நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் பெருகியுள்ளது. இதேபோல், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து சத்தீஸ்கரிலும் நிலைமை மோசமடைந்து வருகிறது.

இந்த பகுதிகளில் உள்ள தண்ணீர், காடுகள், நிலவளங்கள் ஆகியவற்றுக்கு பழங்குடியினராகிய நீங்கள் தான் சொந்தக்காரர்கள். ஆனால், பிரதமர் மோடி அவற்றை ஏன் உங்களிடம் இருந்து பறிக்க முயற்சிக்கிறார்? உங்களிடம் இருந்து நிலங்களை பறித்து அவற்றை பெரு முதலாளிகளுக்கு வழங்குவார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com