ஆந்திரா - ஒடிசா இடையே வங்க கடலில் புயல் சின்னம்: தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்

வங்க கடலில் மேலடுக்கு சுழற்சியால் ஆந்திரா-ஒடிசா இடையே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. 24 மணிநேரத்தில் புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா - ஒடிசா இடையே வங்க கடலில் புயல் சின்னம்: தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்
Published on

சென்னை:

தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த 3 மாதமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மட்டும் அல்லாது தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

மேலும் ஆந்திரா- கர்நாடகா பகுதியில் வளி மண்டலத்தில் உருவான மேலடுக்கு சுழற்ச்சியால் அந்த மாநிலங்களிலும் தமிழ்நாட்டிலும் மழை நீடித்து வருகிறது.

இதன் காரணமாக கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி, பாலாறு, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சென்னையை பொறுத்த வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக அளவு மழை கிடைக்கும். தற்போது வெப்பசலனம் காரணமாக சென்னையின் சுற்றுப்புறங்களில் பலத்த மழை பெய்கிறது. சென்னை நகரில் அவ்வப்போது லேசான மழை பெய்கிறது.

இந்த நிலையில் வடமேற்கு வங்க கடல் பகுதியில் தென் மேற்கு பருவமழை காலம் முடிந்துவிட்டது. இதேபோல் அரபிக்கடல் பகுதியிலும் தென்மேற்கு பருவமழை முடிவடைந்தது. படிப் படியாக மற்ற இடங்களிலும் தென்மேற்கு பருவமழை வாபஸ் ஆகிறது.

வருகிற 25-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்ட மேலடுக்கு சுழற்சியால் ஆந்திரா-ஒடிசா கடல் பகுதியில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த மண்டலமாக (புயல் சின்னமாக)வலுப்பெற்று அதே இடத்தில் நீடிக்கிறது.

இந்த புயல் சின்னமானது வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியில் பலத்த மழை பெய்யும்.

புயல் சின்னம் தமிழ்நாட்டை விட்டுவிலகி ஒடிசா நோக்கிச் செல்வதால் தமிழகத்துக்கு பாதிப்பு இருக்காது என்றும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையிலும் 2 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பூண்டி, வந்தவாசியில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com