

வில்லியனூர்:
வில்லியனூர் அருகே சுல்தான் பேட்டையை சேர்ந்தவர் முகமது சபீஸ். இவர் சுல்தான் பேட்டை மெயின் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் முகமது சபிஸ் செல்போன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை 10 மணிக்கு வழக்கம் போல் முகமது சபீஸ் செல்போன் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, கடையில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். மேலும் கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.15ஆயிரம் ரொக்க பணத்தையும் காணவில்லை.
மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து முகமது சபீஸ் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் வழக்குபதிவு செய்து செல்போன்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.