பஞ்சாப்: போதை பொருள் கடத்தல் கும்பலுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் போலீஸ் பலி

பஞ்சாப் மாநிலத்தில் போதை பொருள் கடத்தல் கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் உயிரிழந்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

அமிர்தசரஸ்:

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநில எல்லை வழியாக இந்தியாவுக்கு போதை பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த கடத்தல்களை தடுக்க எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து பஞ்சாப் மாநில போதை பொருள் தடுப்பு அதிரடி படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் ஜண்டியாலா நகரில் உள்ள ஜனியா கிராமத்தில் போதை பொருள் கடத்தல் கும்பல் பதுங்கி இருப்பதாக போதை பொருள் தடுப்பு அதிரடி படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த கிராமத்திற்கு விரைந்த போலீசார் கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர். அப்போது கடத்தல்காரர்கள் போலீசாரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதை சற்றும் எதிர்பாராத போலீசார் சுதாரித்துக்கொண்டு பதில் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த பயங்கர மோதலின் போது, கடத்தல்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அதிரடி படையை சேர்ந்த காவலர் குர்திப் சிங் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்திய கடத்தல்காரர்கள் அனைவரும் அந்த இடத்தில் இருந்து உடனடியாக தப்பிச்சென்றுவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com