

ராயபுரம்:
செங்குன்றத்தை அடுத்த காரணோடையை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 25). தண்ணீர் கேன் சப்ளை தொழில் செய்து வந்தார். இவருக்கு 1 வாரமாக வயிற்றுவலி, காய்ச்சல் இருந்து வந்தது.
இதையொட்டி ஸ்டான்லி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
நோய் தீராததால் சி.டி. ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன் செய்து டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது காளிதாசின் கல்லீரலில் சீழ் கட்டியும், சிறு குடலில் 12 செ.மீட்டரில் பிளாஸ்டிக் குச்சியும் சுவாசக்குழாயில் 2 பிளேடு துண்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையொட்டி அவருக்கு கடந்த 8-ந் தேதி கல்லீரலில் உள்ள சீழ் கட்டியும், சிறுகுடலில் உள்ள பிளாஸ் டிக்குச்சியும் அகற்றப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 10-ந் தேதி சுவாசக்குழாயில் சிக்கியிருந்த பிளேடுகளும் அகற்றப்பட்டது.
இது குறித்து ஸ்டான்லி மருத்துவமனை டீன் பொன்னம்பல நமசிவாயம் கூறியதாவது:-
காளிதாஸ் என்ற நோயாளி பிளேடு, பிளாஸ் டிக்குச்சியினை விழுங்கியுள்ளார். இது சுவாசக் குழாயில் சிக்கியுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக சுவாசக்குழாயில் சிக்கியுள்ள குச்சிகளை மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சையினை நம் மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து குச்சிகளை அகற்றியுள்ளனர்.
தனியார் மருத்துவ மனையில் இதற்கு பல லட்சங்கள் செலவாகும். இங்கு முதல் அமைச்சர் காப்பீட்டு திட்டம் மூலம் லேசர் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளோம்.
இதில் மயக்கவியல் மருந்து துறை தலைவர் டாக்டர் லிங்கராஜ், சரவண குமார், பேராசிரியர் பால முருகன், விக்னேஸ், பியூலா, உறைவிட மருத்துவர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.