கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 1,000 பேர் விரட்டியடிப்பு

எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ராமேசுவரம்:

ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா, கச்சத்தீவு பகுதிகளில் மீன் பிடிக்க செல்லும்போது எல்லை தாண்டி வருவதாக கூறி அவர்கள் தாக்கி விரட்டியடிப்பதும், சில நேரங்களில் சிறைபிடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த ஓராண்டில் தமிழக மீனவர்கள் 40-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இதனிடையே ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று 50 விசைப்படகுகளில் கடலுக்கு புறப்பட்டனர்.

இவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 5-க்கும் மேற்பட்ட கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டினர். மேலும் கடற்படை வீரர்கள் படகுகளில் ஏறி மீனவர்களை தாக்கி விரட்டியடித்தனர். வலை, மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.

இதனால் உயிருக்கு பயந்து அந்தப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவசரமாக கரை திரும்பினர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் புதிய அதிபர் பதவியேற்ற பின் 2-வது முறையாக மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com