புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு- இலங்கை கடற்படையினர் தொடர் நடவடிக்கை

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரை படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. #TNFishermen #SrilankanNavy
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு- இலங்கை கடற்படையினர் தொடர் நடவடிக்கை
Published on

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 136 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இதில் ரத்தினம்மாள் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மீனவர்கள் ஆனந்தராஜ் (வயது 22), விஷ்வா (23), அஜித் (22), வினோத் (21), ஆனந்தபாபு (35), இளங்கோவன் (30) ஆகிய 6 பேரும், ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற ரத்தினவேல், செல்லத்துரை (70), முருகன் (45) ஆகிய 3 பேரும் நேற்றிரவு இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 9 மீனவர்களையும் விசைப்படகுகளுடன் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்களை 2 விசைப்படகுகளுடன் இலங்கையில் உள்ள காரைநகர் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டதை அறிந்த அவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் சிலரின் சொந்த ஊர் நாகப்பட்டினம் ஆகும். மீன்பிடி தொழிலுக்காக ஜெகதாப்பட்டினத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை செலவுக்காக அவர்கள் மீன் பிடிக்க சென்றிருந்தனர். அதில் வரும் வருமானத்தை வைத்து சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட இருந்தனர்.

இன்று காலை அவர்கள் கரை திரும்ப வேண்டும். பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் 9 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளதால் அவர்களின் குடும்பத்தினர் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வாரம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று 9 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TNFishermen #SrilankanNavy

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com