பிரதமராக நீடிக்க ராஜபக்சேவுக்கு அதிகாரமில்லை - இலங்கை சுப்ரீம் கோர்ட் அதிரடி

மகிந்தா ராஜபக்சே பிரதமராக நீடிக்க தடை விதித்து இலங்கை சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. #Srilanka #MahindaRajapakse #SupremeCourt
பிரதமராக நீடிக்க ராஜபக்சேவுக்கு அதிகாரமில்லை - இலங்கை சுப்ரீம் கோர்ட் அதிரடி
Published on

கொழும்பு:

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரம சிங்கேவுக்கும் இடையிலான பனிப்போரில் கடந்த மாதம் 26-ம் தேதி அதிரடி திருப்பம் ஏற்பட்டது.

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரம சிங்கேவை நீக்கியும், முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை பிரதமர் பதவியில் அமர்த்தியும் சிறிசேனா உத்தரவிட்டார். நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.

நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல தரப்பிலும் குரல் வலுத்தது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை சிறிசேனா கடந்த 14-ம் தேதி  கூட்டினார்.  ராஜபக்சே குதிரைப்பேரம் நடத்தியும், பெரும்பான்மையை நிரூபிக்கத்தக்க அளவுக்கு தேவையான எம்.பி.க்கள் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்து கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டார். நாடாளுமன்ற தேர்தல் ஜனவரி 5-ம் தேதி நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை அறியாமல் பொதுத்தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அந்நாட்டு எம்.பி.,க்கள் 122 பேர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரித்தது. அப்போது, மகிந்த ராஜபக்சே பிரதமராக செயல்படவும், அமைச்சரவை கூட்டம் நடத்தவும் இடைக்கால தடை விதித்துள்ளது.

மேலும், ராஜபக்சேவும், அவரால் அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களும், டிசம்பர் 12-ம் தேதி ஆஜராகவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Srilanka #MahindaRajapakse #SupremeCourt

X

Maalai Malar
www.maalaimalar.com