

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியலறை தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். அவரது மரணம் இந்திய பட உலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில், ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாக உருவாக இருப்பதாகவும், அந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்குவதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த தகவல் குறித்து ராம் கோபால் வர்மா டுவிட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,
`ஸ்ரீதேவி வாழ்க்கையை நான் படமாக இயக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மை இல்லை. ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுக்க நினைப்பது முட்டாள்த்தனம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஸ்ரீதேவியாக நடிக்க எந்த நடிகையாலும் முடியாது என்று நினைக்கிறேன்'.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஸ்ரீதேவி மறைவு குறித்து ராம் கோபால் வெளியிட்ட அறிக்கையில், ஒருவரது வாழ்க்கை வெளியில் இருந்து பார்க்க பொறாமைப்படக் கூடியதாக தெரியும். ஆனால் அதன் மறுமுகம் வேதனையாக கூட இருக்கலாம். இதற்கு ஸ்ரீதேவியின் வாழ்க்கை ஓர் உதாரணம். தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சோகங்கள் அவர் மனதில் காயத்தை ஏற்படுத்தி விட்டன. அதில் இருந்து அவர் நிம்மதியாகவே இல்லை. கேமிராவுக்கு முன்பு நடிக்கும் போது மட்டுமே ஸ்ரீதேவி நிம்மதியாக இருந்தார் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Sridevi #SrideviBiopic