

கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள இரவு விடுதியில் கடந்த 2009ம் ஆண்டு பெண்கள் மற்றும் இளைஞர்கள் மது அருந்தி உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்தபோது, அவர்களை ஸ்ரீராம் சேனா அமைப்பினர் தாக்கி விரட்டியடித்தனர். பெண்களின் முடியைப் பிடித்து இழுத்து வெளியேற்றும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகின.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் உள்ளிட்ட சிலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு, மங்களூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
9 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பிரமோத் முத்தாலிக் உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக கோர்ட் அறிவித்தது.