

இலங்கையில் கடந்த மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதல்களில் 257 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி நடந்து வருகிறது. 200-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
முதல் கட்ட விசாரணையில் மனித வெடிகுண்டு பயங்கரவாதிகளுக்கும் இந்தியாவில் பாலக்காடு, கோவை, பெங்களூர், காஷ்மீர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக மனித வெடி குண்டு பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்று பிறகு இலங்கைக்கு ஊடுருவி இருப்பதாக அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இதையடுத்து கடந்த 6 மாதங்களில் இலங்கையில் இருந்து இந்தியா வந்தவர்களும், இந்தியாவில் இருந்து இலங்கை சென்றவர்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி கடந்த 6 மாதங்களில் இலங்கையில் இருந்து 25 பேர் காஷ்மீருக்கு வந்து சென்றது தெரிய வந்தது. அவர்கள் பற்றிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மனித வெடிகுண்டு பயங்கரவாதியாக மாறிய தவ்ஹீத் ஜமாத் தலைவன் ஜக்ரன் ஹசீம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் செல்லவில்லை என்பது உறுதியாகி உள்ளது. அவன் தமிழக கடலோர பகுதிகளில் இருந்து கள்ளதோணி மூலம் இலங்கைக்கு சென்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
அதுபோல மற்ற மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் எந்தெந்த நாடுகளில் பயிற்சி பெற்று வந்தனர் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக இலங்கை முழுவதும் அதிரடி சோதனைகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இலங்கையில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக இந்திய உளவுத்துறை மீண்டும் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் நடத்த முடியாது போன பயங்கரவாதிகள் கொழும்பில் பதுங்கி இருப்பதாக எச்சரித்துள்ளது.
இதை இலங்கை ராணுவ உளவுத்துறையும் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்காவும் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கொழும்பு முழுவதும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே பயங்கரவாதிகள் கடல் வழியாக நகருக்குள் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக கடற்படையினரும் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கொழும்பு கம்போலாவில் உள்ள பெண்கள் பள்ளியில் குப்பையில் புதைத்து வைத்திருந்த துப்பாக்கிகள் மற்றும் வெடி மருந்துகள் அடங்கிய பார்சல் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பள்ளி வளாகத்தில் ஊழியர் ஒருவர் குப்பை கிடங்கை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது குப்பைக்குள் ஒரு பார்சல் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது 25 கைத்துப்பாக்கிகள் 201 ரவுண்டு சுடக்கூடிய வெடி மருந்து இருந்தது.
இதுகுறித்து பள்ளியின் பாதுகாப்பு அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று நடந்த குண்டு வெடிப்பில் கொம்பாலாவில் இருந்து முகமது இவூகைம் சாதிக் அப்துல்ஹக் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
எனவே, இந்த வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பயங்கரவாத செயல்களுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.