இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்- பிரதமர் ராஜபக்சே ராஜினாமா

இலங்கையில் பாராளுமன்றத்தை அதிபர் கலைத்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதிபரால் நியமிக்கப்பட்ட பிரதமர் ராஜபக்சே இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். #RajapaksaResigns
இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்- பிரதமர் ராஜபக்சே ராஜினாமா
Published on

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அக்டோபர் 26-ம் தேதி அதிபர்  சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். அதிலிருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி அடைந்தார்.

இதற்கிடையே அதிபரின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட இடைக்கால தடை விதித்தது. பின்னர் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், இலங்கை பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அறிவித்தது. மேலும், பாராளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்தது.

கோர்ட் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ராஜபக்சே தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவரது கோரிக்கையை கோர்ட் நிராகரித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com