ராஜபக்சேவுக்கு மரண அடி - ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்ற தீர்மானம் வெற்றி

இலங்கையில் ஓரம்கட்டப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக இன்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி அடைந்தது. #confidencemotion #SriLankanParliament #RanilWickremesinghe
ராஜபக்சேவுக்கு மரண அடி - ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்ற தீர்மானம் வெற்றி
Published on

கொழும்பு:

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு அந்த பதவியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி நியமித்தார். அன்றிலிருந்து இலங்கை அரசியலில் தினமும் அதிரடி திருப்பங்களும் குழப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன.

ராஜபக்சேவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சி தோல்வி அடைந்ததால் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி தேர்தல் நடத்துவதாக சிறிசேனா அறிவித்தார்.

ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. மேலும் தேர்தலுக்கான ஏற்பாடுகளையும் முடக்கி வைத்துள்ளது. ஆனால் ரணில் விக்ரமசிங்கேவும், ராஜபக்சேவும் பிரதமர் பதவிக்கு உரிமை கோரி வருகின்றனர்.

ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை சேர்ந்த 122 உறுப்பினர்கள் மேல் முறையீட்டு கோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த கோர்ட்டு ராஜபக்சே பிரதமராக செயல்பட இடைக்கால தடை விதித்து கடந்த 3-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ராஜபக்சே 4-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானம் இலங்கை பாராளுமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்டது.

225 உறுப்பினர்க்ளை கொண்ட பாராளுமன்றத்தில் இந்த தீர்மானத்தின்மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் விக்ரமசிங்கே ஆதரவு எம்.பி.க்கள் தவிர  தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களித்தனர். 6 உறுப்பினர்களை கொண்ட ஜனதா விமுக்தி பெரமுனா இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்து விட்டது.

இந்நிலையில், 117 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. இதன் மூலம் பிரதமராவதற்கு தனக்கு முழுத்தகுதி உள்ளது என்பதை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் நிரூபித்துள்ளார்.

இலங்கை அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த திருப்புமுனை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா மற்றும் பொம்மை பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு கிடைத்த மரண அடியாக கருதப்படுகிறது. #confidencemotion #SriLankanParliament #RanilWickremesinghe 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com