இலங்கை அதிபர் சிறிசேனா விழா நடந்த பகுதியில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பங்கேற்ற விழா நடந்த பகுதியில் வெடி குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் சிறிசேனா விழா நடந்த பகுதியில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
Published on

கொழும்பு:

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. அதில் 258 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் இலங்கையில் கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொலநறுவை என்ற இடத்தில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மெகுரிகிரிய பிகோபுர தகாம் ஏரியில் இருந்து நேற்று மாலை இது மீட்கப்பட்டது.

மீனவர் ஒருவர் இந்த ஏரிக்கு சென்று மீன் பிடிக்க வலை வீசினார். அதில் இந்த வெடிகுண்டு சிக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து போலீசாரிடம் தெரிவித்தார்.

உடனே அங்கு வந்த போலீசார் வெடி குண்டை கைப்பற்றி சோதனையிட்டனர். அது ‘கிளேமோர்’ ரக குண்டு என தெரியவந்துள்ளது. இந்த குண்டு வெளிநாடு ஒன்றில் தயாரிக்கப்பட்டது.

அதிபர் மைத்ரிபால சிறிசேனா, சமீபத்தில் பொலநறுவை பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள மஹாவெலியில் சுற்றுலா விடுதி உள்ளிட்ட பல திட்டங்களை தொடங்கி வைத்தார். மக்கள் சந்திப்பு கூட்டமும் நடத்தினார்.

அதன் அருகே தான் ஏரியில் இருந்து வெடி குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏரிக்கு வெடிகுண்டு வந்தது எப்படி? அதிபர் வந்த போது அசம்பாவித சம்பவம் நிகழ்த்த பயங்கரவாதிகள் செய்த சதியா? என்பன போன்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com