

இந்தியாவின் தெற்கு எல்லையான தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான இலங்கையில் சுமார் 2 கோடியே 10 லட்சம் மக்கள் வாழும் இலங்கையில் 70 சதவீதம் பேர் புத்த மதத்தினராகவும், பெரும்பாலும் இந்து மதத்தை சார்ந்த தமிழர்கள் 13 சதவீதமும், இஸ்லாமியர்கள் 9 சதவீதமும் உள்ளனர்.
ஒரு பிரிவினர் பிற பிரிவினரை மதமாற்றம் செய்ய முயற்சித்து வருவதாக ஓராண்டு காலமாக தகவல்கள் பரவி வந்தது, இந்நிலையில், சிங்கள வாலிபரை ஒரு கும்பல் தாக்கி கொன்றதற்கு பழிவாங்கும் வகையில் கடந்த 4-ம் தேதி கண்டி மாவட்டத்துக்குட்பட்ட டெல்டெனியா பகுதி அருகே ஒருவரின் கடையை மாற்று மதத்தினர் சமீபத்தில் தீவைத்து எரித்தனர்.
இதனால், கடந்த இருநாட்களாக கண்டி மாவட்டம் மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதியில் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். பொதுச் சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டது.
இதையடுத்து, தலைநகர் கொழும்புவில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அப்பகுதிக்கு ஏராளமான போலீசாரும் துணை ராணுவ படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு ஆகியவை பிரயோகிக்கப்பட்டன. நிலைமை விபரீதம் ஆவதை தடுக்கும் வகையில் நேற்று மாலை 3 மணியளவில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வன்முறை சம்பவங்கள் நாட்டின் பிறபகுதிகளுக்கு பரவுவதை தடுக்கும் வகையில் இன்றிலிருந்து பத்து நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.