

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் பல்லகெலேயில் நேற்று முன்தினம் நடந்த 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி கொழும்பில் வருகிற 31-ந் தேதி நடக்கிறது.
தோல்விக்கு பிறகு இலங்கை அணியின் பொறுப்பு கேப்டன் கபுகேதரா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அணிக்கு வெளியில் இருந்து எந்த பிரச்சினையும் இல்லை. வெற்றி சூட்சமத்தை நாங்கள் மறந்து விட்டோம் என்று நான் நினைக்கிறேன். பல அணிகளுக்கு இதுபோன்ற தோல்வி ஏற்பட்டு இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். ஒரு ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் போதும். அதில் இருந்து ஏற்றம் பெற்று விடுவோம். கடந்த 2 ஆட்டங்களில் எங்களது பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. எங்களது பேட்ஸ்மேன்கள் தங்களது ஆட்ட தரத்தை உயர்த்த வேண்டும். நல்ல ஸ்கோரை குவித்தால் எங்களால் வெற்றி பெற முடியும்.
பும்ராவை, கேப்டன் விராட்கோலி பாராட்டுகிறார்.
வீரர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து அதனை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால் வெற்றி பெற்று விடலாம். அணியில் சில பலவீனங்கள் இருக்கிறது. அதனை அடுத்த ஆட்டத்துக்கு முன்பாக கண்டுபிடித்து களைய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களை குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது.
ஆனால் என்னை பொறுத்தமட்டில் அணியில் எந்த பிரச்சினையும் இல்லை. ஒரு அணியாக எங்களுக்குள் எந்தவித வேறுபாடும் கிடையாது. தற்போது ஒரே விஷயம் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி காண வேண்டும். உள்ளூரில் தொடர்ந்து இரண்டு ஒருநாள் போட்டி தொடரை இழந்து இருப்பது பெரிய பின்னடைவு தான். அணி தேர்வு விவாதம் குறித்து நான் அதிகம் சிந்திக்கவில்லை. வருங்காலத்தில் நாங்கள் சிறந்த அணியாக உருவெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரசிகர்கள் கலாட்டா காரணமாக ஆட்டம் பாதித்த போது டோனி, ரோகித் சர்மா ஆகியோர் மைதானத்தில் அமர்ந்து இருந்த காட்சி.
வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘சிறிய இலக்கு எப்பொழுதும் தந்திரமானது தான். இது மாதிரியான ஆட்டத்தில் 2 முதல் 3 முறை தோல்வியை தழுவிய சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அதனை பெரிய பிரச்சினையாக நினைக்கவில்லை. சேசிங் செய்கையில் ஆடுகளம் சவால் அளிப்பதாக இருந்தது.
இதுபோன்ற ஆட்டங்களில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுமையாக விளையாட வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். ரோகித் சர்மா, டோனி ஆட்டம் அபாரமாக இருந்தது. பந்து வீச்சில் பும்ரா சிறப்பாக செயல்பட்டார். அவர் 3 ஆட்டங்களில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். தொடரை வென்று விட்டதால் விளையாடாத வீரர்களுக்கு எஞ்சிய ஆட்டங்களில் வாய்ப்பு அளிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அளித்த பேட்டியில், ‘ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அது தான் எல்லா நேரங்களிலும் எனது முக்கிய நோக்கமாகும். இலங்கையில் நான் விளையாடுவது இதுவே முதல்முறையாகும். நான் இங்கு இதற்கு முன்பு ஒருபோதும் விளையாடியதில்லை.