

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள பசமுடி என்ற கிராமத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனை சங்கீதா சோரன். ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்ட சங்கீதா 18 மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியிருக்கிறார். ஜூனியர் அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்த்த சங்கீதா கடந்த ஆண்டு இந்திய சீனியர் அணிக்கு அழைக்கப்பட்டார். ஆனால் அதற்குள் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக எதுவும் கைகூடவில்லை.
இந்த நிலையில் வீ்ட்டில் பொருளாதார பிரச்சினை ஏற்பட்டதால் வேறு வழியின்றி மீண்டும் செங்கல் சூளைக்கு தினக்கூலியாக வேலைக்கு செல்கிறார். வேலைக்கு சென்றாலும் நேரம் கிடைக்கும் போது அருகில் உள்ள மைதானத்தில் கால்பந்து பயிற்சியில் ஈடுபடுவதை தவறவிடுவதில்லை. ஒரு சர்வதேச கால்பந்து வீராங்கனை படும் கஷ்டங்களை சுட்டிகாட்டிய பெண்கள் தேசிய ஆணைய தலைவர் ரேகா ஷர்மா அவருக்கு உதவும்படி ஜார்கண்ட் மாநில அரசுக்கும், இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கும் கடிதம் எழுதினார்.