

வாஷிங்டன்:
அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் ‘ஸ்பெல்லிங் பீ’ என்ற போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும். ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டியில் உலக நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகள் பங்கேற்பார்கள். அவர்களில் மிகச்சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச்சுற்றுக்கு அனுப்பப்படுவார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போட்டிகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களே தொடர்ந்து வாகை சூடி
வருகின்றனர். இந்த ஆண்டுக்கான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி அடுத்த மாதம் (மே) நடைபெற இருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் இந்த ஆண்டு ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியை ரத்து செய்வதாக போட்டியை நடத்தி வரும் அமைப்பு அறிவித்துள்ளது.
1925-ம் ஆண்டில் இருந்து நடந்து வரும் இந்த போட்டி 2-ம் உலகப்போர் காரணமாக 1943 முதல் 1945 வரை 3 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது. அதற்கு பிறகு இந்த போட்டி ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.